சென்னையில் உள்ள தினமலர் பத்திரிகை அலுவலகம் இன்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினரால் தாக்கப்பட்டது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தினமலர் பத்திரிகை அலுவலகத்துக்கு இன்று காலை 3 பேர் விளம்பரம் கொடுக்க வந்ததாக கூறி உள்ளே சென்றனர். அப்போது திடீரென வெளியே வந்து காவலாளியை தாக்கியதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டதும் அலுவலகத்துக்கே வெளியே இருந்து 20 பேர் கொண்ட கும்பல் பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்கியது.
அங்கிருந்த கண்ணாடி கதவுகள், தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்தன. தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதில் இரண்டு பேர் பிடிபட்டனர். இவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பிடிபட்ட நாகராஜன் (32), விடுதலை செல்வன் (32) ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காலை 10 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் திருமாறன் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த 100 பேர் பத்திரிகை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த வந்தனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், தினமலர் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டித்துள்ளது. பத்திரிகை அலுவலகம் தாக்கப்படுவது ஜனநாயகத்திற்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடுக்கும் சவாலாகும். இத்தகைய கோழைச் செயலை கண்டிப்பதாகவும், இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.