புதுச்சேரியிலிருந்து இரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்றது தொடர்பாக மத்திய புலனாய்வுத் கழகத்தினர் (சி.பி.ஐ.) இன்று விசாரணை துவக்கியுள்ளனர்.
புதுவையில் இருந்து இரயில் மூலம் கடத்தப்படவிருந்த 2,400 டன் ரேஷன் அரிசி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிடிபட்டது. இது தொடர்பாக ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ரேஷன் அரிசி கடத்தல் நீண்ட காலமாக நடை பெறுவதாகவும், இதற்கு அதிகாரிகள் பலர் உடந்தை என்றும் கூறப்பட்டது.
தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டு புதுச்சேரியிலிருந்து இரயில் மூலம் அயல் மாநிலங்களுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு விற்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து மத்திய புலனாய் கழகத்தினர் விசாரணை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின.
இதனை ஏற்று ம.பு.க. விசாரணை நடத்த முதலமைச்சர் கருணாநிதி பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்த ம.பு.க. விசாரணை இன்று துவங்கியது.
ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் இன்று புதுச்சேரி வந்து மாநில உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் ராமச்சந்திரனிடம் முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். மேலும் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.