வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரசபை தலைவர் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் குடியாத்தம் நகராட்சியில் எவ்விதமான மக்கள் நலப்பணிகளும் நடை பெறாமல் தி.மு.க. அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை கண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை உண்ணாவிரதம் நடக்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பணியின் மகத்துவத்தை உணர்ந்து அ.இ.அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் நகரசபை தலைவர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். ஆனால் தி.மு.க. நகராட்சி தலைவர்களை கொண்டு இயங்கி வருகின்ற நகராட்சி நிர்வாகங்களில் குளறுபடிகளும், மக்கள் பணியை துச்சமென மதிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மக்கள் நலப்பணியில் அ.இ.அ.தி.மு.க. ஆர்வம் காட்டுவதை சகித்துக் கொள்ள முடியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்கள் நலப்பணிகளை நிறைவேற்றாமல் முடக்கி வைப்பதில் தி.மு.க. கவுன்சிலர்களும், அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அரசும் செயல்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரசபை தலைவர் அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் குடியாத்தம் நகராட்சியில் எவ்விதமான மக்கள் நலப்பணிகளும் நடை பெறாமல் தி.மு.க. அரசால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அங்கு கடந்த 6 மாத காலமாக நகராட்சி ஆணையாளர் பொறுப்பும் காலியாக உள்ளது.
ஆற்காடு நகராட்சியின் ஆணையாளர் இந்த நகராட்சியின் கூடுதல் ஆணையாளராக பொறுப்பு வகித்து வருவதால், அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக குடியாத்தம் நகராட்சியில் சுகாதாரப் பணிகள், புதிய குடிநீர் குழாய் இணைப்புகள், வரி விதிப்பு உள்ளிட்ட மக்கள் நலப்பணிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளன.
குடியாத்தம் நகரமன்றத்தை செயல்படவிடாமல் தடுத்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. வேலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் நாளை (10ஆம் தேதி) குடியாத்தம் நகரமன்ற அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.