சிமெண்ட் விலையை குறைப்பதற்கு சிமெண்ட் ஆலை அதிபர்கள் முன்வந்துள்ளனர். நலிந்த மற்றும் பின்தங்கிய மக்கள் பயனடையும் வகையில் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் விற்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக முதலமைச்சர் கருணாநிதியை தனியார் சிமெண்ட் ஆலை உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளான என்.சீனிவாசன் (இந்தியா சிமெண்ட்ஸ்), பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா (மெட்ராஸ் சிமெண்ட்ஸ்), வேணுகோபால் (கிராசிம் சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ்), வெங்கடேசன் (டால்மியா சிமெண்ட்ஸ்), எம்.ஏ.எம். ஆர்.முத்தையா, (செட்டி நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன்) மற்றும் அசோசியேடட் சிமெண்ட் கம்பெனியின் நிர்வாகி ஆகியோர் சந்தித்து சிமெண்ட் விலையினை குறைப்பது குறித்த தங்களுடைய ஒப்புதல் கடிதத்தினை முதல்வரிடம் அளித்தார்கள்.
அதன்படி, தமிழகத்தில் சிமெண்ட் விலையைக் குறைக்க வேண்டுமென்பதற்காக முதலமைச்சர் தெரிவித்த கருத்தினை மனதிலே கொண்டு பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களுக்கும் மற்றும் நடுத்தர மக்களுக்கும் பயனளிக்கதக்க வகையில் மாதம் ஒன்றுக்கு 20 லட்சம் மூட்டைகள் சிமெண்ட்டை குறைந்த விலையில் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் விற்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்கள். அரசு அதிகாரிகள் வழங்கும் பெர்மிட்டின் அடிப்படையில் சிமெண்ட் நிறுவனங்கள் பொது மக்களுக்கு மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் விற்பார்கள்.
மேலும் இந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் தொழில் வளம் மேம்படவும், தமிழக அரசின் சார்பில் அண்மையில் அறிவித்த புதிய தொழில் கொள்கைக்காகவும் தங்களின் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்கள் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.