பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க ஜனவரி 12ஆம் தேதி முதல் சிறப்பு இரயில்கள் என்று மத்திய இரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவும், கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு பேருந்துகளின் நிர்வாக இயக்குனர் எம்.செல்லபாண்டியும் கூறியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பே நிரம்பி விட்டன. ஜனவரி 20ஆம் தேதி வரை அனைத்து வகுப்புகளிலும் இடமில்லை.
இதனால் அயலூருக்கு செல்லும் பொது மக்கள் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதே நிலைதான் பேருந்து பயணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அயலூர் செல்லும் அனைத்து விரைவு பேருந்துகளிலும் முன்பதிவு முடிந்து விட்டன. மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு, தனியார் பேருந்துகளிலும் இடமில்லை.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தெற்கு இரயில்வே சிறப்பு இரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து மத்திய இரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறுகையில், பொங்கலை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க முக்கிய வழித்தடங்களில் சென்னையில் இருந்து சிறப்பு இரயில்கள் ஜனவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இயக்கப்படும்.
இதே போல் மறுமார்க்கத்திலும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். சில குறிப்பிட்ட இரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படும் என்று அமைச்சர் வேலு கூறினார்.
சென்னையில் இருந்து அயலூர்களுக்கு அரசு விரைவு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் எம்.செல்லாண்டி தெரிவித்தார். அவர் கூறுகையில், சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 600 விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிர பொங்கல் பண்டிகையையொட்டி அல்ட்ரா டீலக்ஸ், டீலக்ஸ், குளிர் சாதன வசதியுடன் கூடிய 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளன.
கடைசிநேர நெரிசலை சமாளிக்க கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகள் ஜனவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இயக்கப்படும். இதற்காக மதுரை, திருச்சி, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட இதர அரசு போக்கு வரத்து கழகங்கள் பஸ்கள் (ஸ்பேர்) சென்னைக்குவர வரழைக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு சென்றால் உடனே பேருந்தில் பயணம் செய்யும் வகையில் டோக்கன் வழங்கப்படும். இதற்காக 14 கவுண்டர்கள் செயல்படுகின்றன.
ரூ.10 கொடுத்து டோக்கன் பெற்று பயணம் செய்யும் பேருந்தில் உட்கார்ந்து கொள்ளலாம். பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய விரிவான ஏற்பாடுகளை விரைவு போக்குவரத்து கழகம் செய்துள்ளது என்று அரசு விரைவு பேருந்து நிர்வாக இயக்குனர் செல்லாண்டி கூறினார்.