பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேருக்கு ஊக்கத் தொகை நாளை வழங்கப்படும் என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக் குழு ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் செயல்திறன் ஊக்கத் தொகை, கடந்த கால ஆட்சியில் ஐந்தாண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்ததை மீண்டும் கடந்த ஆண்டு முதல் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்குவதென்று முதலமைச்சர் கருணாநிதி சென்ற ஆண்டு அறிவித்து அவ்வாறே வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 2007ஆம் ஆண்டில் 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணி புரிந்த பணியாளர்களுக்கு 85 ரூபாய் வீதமும், 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்களுக்கு மேல் பணி புரிந்த பணியாளர்களுக்கு 625 ரூபாய் வீதமும் செயலாக்க ஊக்கத் தொகையாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 264 பணியாளர்களுக்கு மொத்தம் ஏறத்தாழ ஏழு கோடி ரூபாய் வழங்குவதற்கான ஆணையை முதலமைச்சர் கருணாநிதி பிறப்பித்துள்ளார். இந்தத் தொகை அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நாளையே வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.