குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் மார்ச் 24ஆம் தேதி ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி முன்னாள் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு சென்னை பெரு நகர குற்றவியல் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தபோது, ஆளுநர் மாளிகையில் உள்ள ரகசியங்களை வெளியில் சொன்னதாக கூறி ஆளுனரின் துணை செயலாளர் மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில் 5 ஊழியர்கள் தற்காலி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர் அந்த ஐந்து பேரும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் அந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை 15வது பெரு நகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பரமராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மார்ச் 24ஆம் தேதி ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி அழைப்பாணை அனுப்பும் படி உத்தரவிட்டார்.