16 மருத்துவர்கள், 20 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு 16 மருத்துவர்கள், 20 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணையை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையில் கடந்த 5 வருடங்களாக காலியாக இருந்த 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் முதல் கட்டமாக 18 மருத்துவர்கள், 2 கால்நடை மருத்துவர்கள், 8 மருந்தாளுநர்கள், 2 செவிலியர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பட்டியல்கள் பெறப்பட்டு சென்ற ஆண்டு அக்டோபரில் பணியமர்த்தப்பட்டார்கள்.
அதே போன்று மாவட்ட குடும்ப நலத்துறையில் 2004 ஆம் ஆண்டில் தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்பட்ட 32 மருத்துவர்களுக்கும் உள்ளாட்சித்துறை அமைச்சரால் பணி நிரந்தரம் செய்யப்பட்டு சென்ற ஆண்டு அக்டோபரில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதே நிகழ்ச்சியில் 10 மருத்துவர்களுக்கு நிரந்தர அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் பொது சுகாதாரத்துறையில் 7 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், மாவட்ட குடும்ப நலத்துறையில் 9 மருத்துவர்கள், 18 செவிலியர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகள் இன்று (8ஆம் தேதி) வழங்கப்பட்டது. அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு 16 மருத்துவர்கள், 20 செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதன் மூலம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதி நலவாழ்வு மையங்களில் அளிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.