தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், தூக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் ஆயுத சட்டப்பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
திருவண்ணாமலை பகுதியில் ராஜன் தலைமையில் கொள்ளையடித்த கும்பல்களை போலீசார் துப்பாக்கி சுட்டனர். பதிலுக்கு கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று காவலர்கள் மரணம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றம், ஆயுத சட்டம் 27(3) பிரிவின்படி ராஜனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அனைவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். நீதிபதிகள் டி.முருகேசன், வி.பெரியகருப்பையா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், தூக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் ஆயுத சட்டம் 27-வது பிரிவை ரத்து செய்யவேண்டும் என்று ராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது, தீவிரவாதிகளை ஒடுக்கவே இந்த சட்டப்பிரிவு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும், கொலை வழக்கின் அப்பீல் வழக்கை மட்டுமே இந்த அமர்வு விசாரிக்க முடியும் என்றும், 1989-ல் கொண்டு வந்த இந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க இயலாது என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன் வாதிட்டார்.
இந்த சட்டத்தை எதிர்த்து தனியாக `ரிட்' மனுதான் தாக்கல் செய்யவேண்டுமே தவிர, அப்பீல் வழக்கோடு தாக்கல் செய்ய முடியாது என்று சொலிசிட்டர் ஜெனரல் கருத்து தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு சார்பிலும் கருத்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர்.