சென்னையில் உள்ள அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு இன்று காலை வகுப்புகள் துவங்கி நடந்து வந்தது.
இந்த நிலையில் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், மீனம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம். சிறிது நேரத்தில் அது வெடித்து விடும் என்று கூறிவிட்டு அந்த மர்ம நபர் தொலைபேசியை துண்டித்து விட்டான்.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் காவல்துறையினர் விரைந்து வந்து பள்ளியில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் இது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.