தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி துவங்கி வைத்தார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் குழந்தைகளுக்கு முதல்வர் சொட்டு மருந்து வழங்கினார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்காகத் தமிழகம் முழுவதும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதனால், அண்மைச் சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் போலியோ நோய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், கர்நாடகம், ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களில் குழந்தைகள் போலியோவினால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த மாநிலங்களிலிருந்து போலியோ நோய்க் கிருமிகள் தமிழகத்திற்குப் பரவும் வாயப்பு உள்ளதால், போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்களை இந்த ஆண்டிலும் மாநிலம் முழுவதும் நடத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் 6.1.2008 மற்றும் 10.2.2008 ஆகிய இரு நாட்களில் போலியோ சொட்டு மருந்து போடும் சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடை பெறுகின்றன.
அரசுத் துறைகள், ரோட்டரிச் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் துணையுடன், 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் கலைஞர் இன்று (6.1.2008) அவரது இல்லத்தில், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து போட்டுத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் வி.கே. சுப்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னையில் 5 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது. சைதாப்பேட்டை மாநகராட்சி நலவாழ்வு மையத்தில் போலியோ சொட்டு மருந்தை மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
சென்னை மாநகரில் ஐந்து வயதிற்குட்பட்ட 4.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. 500 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஒரு முகாம் வீதம் அமைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், மாநகராட்சி பள்ளிகள் என அனைத்து இடங்களில் 1026 முகாம்களும், நடமாடும் ஊர்திகள் மூலம் 100 முகாம்கள் என மொத்தம் 1126 போலியோ சொட்டு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப் பணியில் 4500 சுகாதார பணி யாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று விடுபட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1752 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 7008 செவிலியர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 3.5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை 7 மணியளவில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாம் மாவட்டத்தில் 2192 இடங்களில் நடக்கிறது. 5 லட்சத்து 20 ஆயிரத்து 687 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
கடலூர் நகராட்சி மூலம் இன்ற 68 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது. சொட்டு மருந்து முகாமை கடலூர் பேருந்து நிலையத்தில் காலை 8 மணிக்கு ஆட்சியத் தலைவர் ராஜேந்திர ரத்னு துவக்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் மொத்தம் சுமார் 2 லட்சத்து 51 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.
செவிலிமேடு பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்தார். இதேபோல் அனைத்து மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.