இலங்கையில் தமிழ் எம்.பி. தியாகராஜா மகேசுவரன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசிய இயக்கத் தலைவரும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழீழ விடுதலை ஆதரவாளர் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான மகேசுவரன் புத்தாண்டு நாளன்று கோவிலில் வழிபாடு நடத்தி கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்.
2006-ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். 2007-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் முன்னாள் மேயரான நடராசா ரவிராஜ் சுட்டு கொல்லப்பட்டார்.
இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் கும்பல்தான் இந்த படுகொலையை செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் படுகொலைகள் அனைத்தும் இந்த கும்பலால்தான் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை நிலவுமானால் சாதாரண தமிழ் மக்களின் நிலை மிகவும் பாதுகாப்பற்றதாகும். தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற கொழும்பு மாவட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேசுவரன் கொடூரமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சிங்கள கட்சியிலே அவர் உறுப்பினராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் சிங்கள பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வந்தார். அதனால்தான் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதனை திசை திருப்புவதற்காக இந்தப் படுகொலையில் விடுதலைப் புலிகளை இணைத்து வதந்திகளை பரப்புகின்றனர். தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ஒரு உறுப்பினரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றார்கள் என்னும் கட்டுக்கதை மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
எனவே இந்திய அரசு, ஈழச் சிக்கலில் சிங்கள அரசுக்கு துணை போகாமல் அவர்களை எச்சரித்து இத்தகைய போக்குகள் தொடருவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சிங்கள பேரினவாதக் கும்பலின் இத்தகைய காட்டு மிராண்டிதனத்தை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.