''இந்தியா-இலங்கைக்கு இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் செல்லாது என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இலங்கை சுதந்திரதின விழாவில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், குஜராத்-இமாசலப் பிரதேச தேர்தல் முடிவுகளின் மூலம் காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்து இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்தால் அவர்களுடைய செல்வாக்கு சரிந்து விடும். எனவே விரைவில் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறுவார்கள். இந்த ஆண்டிலேயே பாராளுமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட் டணி வைப்பது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா தான் முடிவு செய்வார். நாங்கள் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம்.
சேது சமுத்திர திட்டம் தேவையானது தான். ஆனால் முதலமைச்சர் கருணாநிதி ராமரைப் பற்றி தேவையில்லாமல் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து சிக்கலை ஏற்படுத்தி விட்டார். கடவுளை நம்புவோர் மனதை புண்படுத்தாத வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இந்தியா-இலங்கைக்கு இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் செல்லாது என்று இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இலங்கை சுதந்திரதின விழாவில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக சிங்கள அரசு பொய்யை பரப்பி வருகிறது. இதில் துளியும் உண்மை கிடையாது என்று வைகோ கூறியுள்ளார்.