கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் பெரும் அளவில் தண்ணீரை தேக்கவிடாததால் 1.70 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.3,500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது'' என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.க. ஆட்சியைப் பொருத்தவரை 2006ஆம் ஆண்டு அவர்கள் பொறுப்புக்கு வந்த நாள் முதல் வீணான ஆடம்பரத்திற்காக விளம்பர விழாக்களில் தான் நேரத்தை செலவிடுகிறார்கள். மக்களின் ஜீவாதார உரிமைகளைப் பாதுகாக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.
தமிழகத்தில் எதிர்கால சந்ததியினரை பாதிக்கக் கூடிய ஜீவாதார பிரச்சனைகளான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைகளில் முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க தவறி விட்டார். மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மேலும் பல ஆதாயப் பதவிகளை பெற வேண்டும் என்பதற்காக, இடது சாரிகளை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சாதகமாக முதல்வர் நடந்து கொள்கிறார்.
கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் பெரும் அளவில் தண்ணீரை தேக்கவிடாததால் 1.70 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.3,500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், இலவச பொருட்களை வழங்கி விளம்பரம் தேடுவதிலேயே முதலமைச்சர் ஆர்வம் காட்டுகிறார்.
தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மின் வெட்டு உள்ளது. விவசாயிகள், பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டுள்ளனர். நெல்லுக்கு டன்னுக்கு 1000 ரூபாய் என்ற விலை கிடைக்கவும் தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளவில்லை.
எனவே, இவற்றை வலியுறுத்தி ஜனவரி 11ஆம் தேதி தென் மாவட்ட விவசாயிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து கோவில்பட்டியில் ம.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தவிருக்கிறோம். 2008 ஆம் ஆண்டைப் பொருத்தவரை அரசியலில் முக்கிய கட்டமாக இருக்கும். மத்தியில் இடதுசாரிகள் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவார்கள். இதனால் நிச்சயம் மாறுதல் ஏற்படும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் கைவோ கூறியுள்ளார்.