சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 ஆம் தேதி நள்ளிரவில் நடந்த விழாவில் நீச்சல் குளத்தில் விழுந்து ஒருவர் பலியானார். இது தொடர்பாக ஓட்டல் மேலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஓட்டலில் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது அங்குள்ள 25 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தின் நடுவே மரப்பலகையில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் குடிபோதையில் மேடையில் ஆடிப்பாடி நடனம் ஆடியபோது மேடை திடீரென சரிந்து விழுந்து. இதில் ஏராளமானோர் நீச்சல் குளத்தில் விழுந்தனர். இதில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் சுமித் அக்னிஹோத்ரி (28) என்பவர் பலியானார். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஓட்டல் மார்க்கெட்டிங் மேலாளர் அந்தோணி மைக்கேல் (48) என்பவரை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர். இவர் மீது கவனக்குறைவாக இருந்துள்ளதாக கூறி 304 (ஏ)யின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.