பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.250 கோடி செலவில் மூன்றரை கோடி ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப் படுகிறது. இதன் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி நேற்று சென்னையில் துவக்கி வைத்தார்.
பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் துவக்க விழா சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், கடந்த ஆண்டுகளில் 2 கோடி அளவுக்கு எண்ணிக்கையுள்ள வேட்டி, சேலைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 65 லட்சம் பாலிகாட் சேலைகளும், ஒரு கோடியே 65 லட்சம் பாலிகாட் வேட்டிகளும் என்ற அளவில் மொத்தமாக 3 கோடியே 30 லட்சம் என்ற அளவுக்கு எண்ணிக்கையுள்ளவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கு அரசின் சார்பில் செலவழிக்கப்படுகிற தொகை 250 கோடி ரூபாய்.
கைத்தறி ஆடைகள், ஏழை எளியவர்களாக இருக்கின்ற- வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கின்ற மக்களுக்கு வழங்கும்போது, அது சேலைகளாக அல்லது வேட்டிகளாக அமையும்போது அவைகளை நல்ல மில் துணிகளாகக்கூட எடுத்துவிடலாம். கொடுத்துவிடலாம். அந்த துணிகளை வாங்கிக்கொடுக்கும்போது அந்த துணிகளை விற்பவர்கள் அந்த வேட்டியை சேலையை தருகின்றவர்கள் நெசவாளர்களாக இருந்தால் அவர்களின் பசியும் போக்கப்படும்.
சிலர் கூட அறிக்கை விட்டிருக்கிறார்கள்- டி.வி. கொடுக்கிறார்கள், அதைக் கொடுக்க வேண்டுமா என்று கேட்டு விட்டு டி.வி. கொடுக்காதே, டி.வி.க்கு செலவழிக்கின்ற பணத்தை வெள்ள நிவாரணத்திற்கு செலவழி என்றெல்லாம் கூட யோசனை சொல்கிறார்கள். வெள்ள நிவாரணத்திற்கு பணம் இல்லாவிட்டால் நான் டி.வி. கொடுக்கமாட்டேன். டி.வி.யை நிறுத்திவிட்டுத் தான் வெள்ள நிவாரணத்தைக் கவனிப்பேன். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். கவலைப்படாதீர்கள். உங்கள் ஆசியால் (?) அம்மையாரே, எங்களிடம் வெள்ள நிவாரணத்திற்கும் பணம் இருக்கிறது. டி.வி. வாங்கிக் கொடுக்கவும் பணம் இருக்கிறது. இதற்காக யாரும் கவலைப்படவேண்டாம். நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டாம் என்று அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.