Publish Date: Fri, 21 Dec 2007 (17:13 IST)
Updated Date: Fri, 21 Dec 2007 (17:13 IST)
''விடுதலைச்சிறுத்தைகள் கட்சியால் தமிழக அரசுக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படாது'' என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறினார்.
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 60வது பிறந்த தினத்தையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் இன்று நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள், விடுதலைப் புலிகள் பிரச்சினையில் திருமாவளவன் தமிழக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படத்தக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளாரே என்று கேட்ட கேள்விக்கு திருமாவளவன் பதில் அளிக்கையில், எங்களால் எந்த தர்மசங்கடமும் அரசுக்கு ஏற்படாது.
எங்கள் மீது கொண்ட அக்கறை காரணமாகவும், கூட்டணி நலன் கருதியும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அவ்வாறு கூறியிருக்கலாம். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரியாரைப் போல் நீடூழி வாழ வேண்டும் என்று அவருக்கு நான் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தேன் என்று திருமாவளவன் கூறினார்.