தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது.
கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் 3 பேரை எரித்துக் கொன்ற வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நெடுஞ்செழியன், மாது (எ) ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரை வரும் 2008 ஜனவரி 10ஆம் தேதி கோவை மத்திய சிறையில் தூக்கிலிடும்படி சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி மாணிக்கம் கோவை சிறைக்கு பிணை அனுப்பி இருந்தார்.
இந்தநிலையில் குற்றவாளிகளின் சார்பில் வழக்கறிஞர்கள் ரவிச்சந்திரன், அசோக்குமார் ஆகியோர் நீதிபதி மாணிக்கத்திடம் ஒரு மனுவை அளித்துள்ளனர். அதில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நேற்று (20ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், ஜனவரி 2ஆம் தேதி வரை நீதிமன்றங்கள் விடுமுறை என்பதால், அதற்குப் பின்னர் அந்த மனு மீது விசாரணை நடைபெறும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது குறித்து சேலத்தில் வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு மனு மூலமாகவே தகவல் தெரிவித்துள்ளனர்.