மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ள நிலையில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவிலும், முதலமைச்சர் கருணாநிதி டெல்லியிலும் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஓயாத மழை, தொடர் வெள்ளப்பெருக்கு, சாவு எண்ணிக்கை 40க்கு மேல் உயர்ந்துவிட்டது. வீடுகளை இழந்த மக்கள் தங்கும் இடம், உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்கு ஆலாய் பறக்கிறார்கள். வீடுகளில் கழிவுநீர், வெள்ள நீர் புகுந்து அவற்றை வெளியேற்ற முடியாமல் திணறுகின்றனர். சாலைகள் சேதமடைந்து வெள்ளத்தால் பாலங்கள் உடைபட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. யாரும் மக்களுக்கு உதவி செய்யவில்லை.
கேட்பாரற்று தமிழகம் கிடக்கின்றது. தமிழகத்தில் ஒரு அரசாங்கம் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. என்னுடைய ஆட்சியாக இருந்தால் இந்நேரம் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பேன். ஆனால் மாநாடு நடத்திய களைப்பில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கேரளாவில் சுற்றுலா தலமான குமரக்கோமில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். கருணாநிதியோ டெல்லிக்குப் பறந்திருக்கிறார்.
டெல்லியில் இருந்து கொண்டே "உடல் நலமில்லை' என்று காரணம் கூறி பயங்கரவாதத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி விவாதிக்க கூட்டப்பட்ட முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். மற்ற பரிவாரங்களும் அவருடனே சென்றுவிட்டன. வெள்ளப் பகுதிகளை எந்த அமைச்சரும் எட்டிப் பார்க்கவில்லை. மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை? இவர்கள் செய்கின்ற அக்கிரமங்களை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. கூடிய விரைவில் மக்கள் இவர்களை தூக்கி எறிவார்கள் என்பது திண்ணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.