சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர்வழி பாதைகளின் கரையோரங் களில் 33,000 இடங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று வருவாய்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
இது குறித்து அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்து 650 ஏக்கர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதில், 70 ஆயிரத்து 45.74 ஏக்கர் பரப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளைப் பொறுத்தவரையில், ஒரு லட்சத்து 28 ஆயிரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இதில், மொத்தமாக 25 ஆயிரம் ஏக்கர், நீர்வழி நிலம் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்த வித ஆக்கிரமிப்புகளையும் அரசு அனுமதிக்காது. கல்லூரி, பள்ளிக்கூடங்கள் என யாராக இருந்தாலும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
திண்டிவனம் அருகில் கல்லூரி கட்டப்பட்டிருக்கும் மருத்துவர் ராமதாஸ் தொடர்புடைய இடம், விவசாய நிலம்தான். அதில், நெல் பயிரிடப்படாவிட்டாலும், சோளம் பயிரிடப்பட்டு வந்தது. நெல் பயிரிடப்படாத களர் நிலங்கள் மானாவரி நிலம் எனப்படும். அவற்றில் சோளம், கம்பு போன்றவை பயிரிடப்படுகின்றன. இது தொடர்பாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஏற்கனவே விரிவான விளக்கம் அளித்திருக்கிறார்.
சென்னையில் கூவம், பக்கிங்காம், அடையாறு ஆகிய நீர்நிலைகளின் கரையோரங்களில் 33 ஆயிரம் இடங்களில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்துடன் இணைந்து அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்துவிட்டு அவர்களை அங்கிருந்து விரைவில் அப்புறப்படுத்துவோம் என்று அமைச்சர் பெரியசாமி கூறினார்.