Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏரி, குளங்களில் வசித்து வருபவர்களை வெளியேற்றக் கூடாது: ராமதாஸ்!

Advertiesment
ஏரி, குளங்களில் வசித்து வருபவர்களை வெளியேற்றக் கூடாது: ராமதாஸ்!

Webdunia

, வியாழன், 20 டிசம்பர் 2007 (10:19 IST)
''சொத்துவரி, குடிநீர் வரி செலுத்தியிருப்பதால் ஏரி, குளங்களில் நீண்ட காலமாக வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கை தவிர்க்கப்பட வேண்டும்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை புறநகர் பகுதியிலும், வேறு சில இடங்களிலும் பயனற்று கிடந்த ஏரி, குளங்களில் வீடு கட்டி பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்ற பல லட்சம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவது என்ற நடவடிக்கை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். அவர்களிடம் இதற்கு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களும் மற்றும் பதிவு செய்யப்படாத, அதேநேரத்தில் பணம் கொடுத்து வாங்கியதற்கான இதர ஆவணங்களும் இருப்பதாக சொல்லுகிறார்கள். அவர்கள் வசித்து வருகின்ற குடியிருப்புகளுக்கு சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

தனித்தனி வீடுகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை முதலியன அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. சொத்துவரி, குடிநீர்வரி, மின்கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வந்திருக்கிறார்கள். இப்போது ஏரி, குளங்களில் இவர்கள் வாழ்ந்து வருவது சட்டவிரோதம் என்றால், அது ஆக்கிரமிப்பு என்றால், இவர்களிடம் இருந்து இத்தனை ஆண்டு காலமும் சொத்துவரி, குடிநீர்வரி வசூலித்ததும், மின்கட்டணம் பெற்றதும், மற்றும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை வழங்கியதும் சட்டவிரோதம் என்றுதானே அர்த்தம். இதற்காக யார் மீது நடவடிக்கை எடுப்பது?

சமூக அடிப்படையிலும் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள இந்த மக்களை அவர்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். அவர்கள் வசித்து வரும் குடியிருப்புகளை பாரபட்சமின்றி முறையாக பதிவு செய்து அனைவருக்கும் சட்டப்பூர்வமான குடிமனைப்பட்டா வழங்க அரசு முன்வர வேண்டும். அத்துடன் ஏரி, குளம் முதலான நீர் நிலைப்பகுதிகளில் இப்போது குடியிருப்பு அமைந்துள்ள பகுதிகளை தவிர்த்து எஞ்சிய நீர் ஆதாரப்பகுதிகளில் இனிமேல், எந்தவித ஆக்கிரமிப்பும் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஆக்கிரமிப்பு எங்கேயாவது இனி எதிர்காலத்தில் நடைபெறுமானால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் பொறுப்பு என்று அரசு எச்சரிக்க வேண்டும் எ‌ன்று மரு‌த்துவ‌ர் ராமதாஸ் கூறியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil