திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை மையமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல்கலைக் கழக மானியக் குழுத் தலைவராக முதன் முதலாக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் தோரட் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எங்களின் பிறந்த மண் அறக்கட்டளை சார்பாக அடுத்த மாதம் 2வது வாரத்தில் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும்.
இந்த பாராட்டு விழாவில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழக வேந்தர் ஜி. விசுவநாதன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் முஸ்தபா உள்ளிட்ட கல்வியாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை மையமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியையும் மையமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் குழு அரசியல்வாதிகள், தமிழ்நாட்டில் உருவாகும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் அமர்வது மக்களுக்கு தொண்டாற்றுவது என்ற நிலை மாறி ஆட்சிக்கு வருவதே குபேரன் ஆவதற்குதான் என்கிற மனப்போக்குதான் கொலை போன்ற செயல்களின் வெளிப்பாடாக உள்ளது. எனவே தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் அமைப்புகளை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.