சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த வன்முறை குறித்து விசாரணை நடத்திய குமரி அனந்தன் தலைமையிலான குழு கட்சி மேலிடத்திற்கு இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 11ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சட்டபேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் விஷ்ணு பிரசாத் கலந்து கொண்டார். அப்போது முதல் மாடியில் இருந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை சென்னை மாநகராட்சி காங்கிரஸ் உறுப்பினர் வில்லியம்சும், அவரது அடியாட்களும் தாக்கினர். இதில் மயூரா ஜெயக்குமார் பலத்த காயம் அடைந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சைதை வில்லியம்ஸ் உள்பட 2 பேரரை கைது செய்தனர். மேலும் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விஷ்ணு பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் பிணைய விடுதலை கோரி மனு தாக்கல் செய்த வழக்கில் அவரை 15 நாட்கள் கைது செய்யக் கூடாது என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு காரணமான சைதை வில்லியம்சை கட்சியின் மேலிடப் பிரதிநிதி அருண்குமார் கட்சியிலிருந்து நீக்கினார். மேலும் சத்தியமூர்த்தி பவன் நடந்த வன்முறை சம்பவம் குறித்து விசாரணை செய்ய மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், ஜி.ஏ. வடிவேலு, சட்டமன்ற உறுப்பினர் டி. யசோதா ஆகியோரை கொண்ட குழுவை அவர் நியமித்தார்.
இந்த குழுவினர் சட்டமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரனிடம் சென்று, இந்த சம்பவத்தில் அதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விசாரணையில் என்ன விவரங்கள் வெளிவந்துள்ளன என்பது பற்றி விசாரித்தனர். மேலும் வன்முறையில் சம்பவத்தை நேரில் பார்த்த கட்சியினரிடமும் விசாரணை நடத்தியது.
பின்னர் இந்த விசாரணை குழுவினர் அறிக்கை தயார் செய்தனர். விசாரணை குழுவினர் 3 பேரும் இன்று காலை விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு மேலிட பிரதிநிதி அருண்குமாரிடம் தங்கள் அறிக்கையை அவர்கள் அளித்ததாக கூறப்படுகிறது. இந்தஅறிக்கையை அருண்குமார் கட்சி மேலிடத்திடம் அளிக்க உள்ளார்.
எந்த காரணத்தை கொண்டும் கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களை கட்சி தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்குள் அழைத்து வரக்கூடாது என்றும், வன்முறைக்கு இடம் தரக்கூடாது என்றும், கடுமையான எச்சரிக்கைகளை கட்சி மேலிடம் விடுத்து, சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிகிறது.