தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு செய்தி குறிப்பு தெரிவித்துள்ளது.
கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பரூக்கி அளித்த பரிந்துரையின் பேரில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அரசின் செய்தி குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பரூக்கி அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்று அரசு சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்த அறிக்கைகள் குறித்து தலைமைச் செயலர், வளர்ச்சி ஆணையர், முதன்மைச் செயலர், உள்துறைச் செயலர், நிதித் துறை செயலர் ஆகியோருடன் முதலமைச்சர் கருணாநிதி நேற்று விவாதித்தார்.
அத்துடன் அந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை வலுப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதுகுளத்தூர் நான்காம் வகைக் காவல் நிலையத்தை இரண்டாம் வகை காவல் நிலையமாகவும், கீழத் தூவல் ஐந்தாம் வகை காவல் நிலையத்தை இரண்டாம் வகை காவல் நிலையமாகவும் தரம் உயர்த்த ஆணையிட்டார்.