சேதுசமுத்திர திட்டம் வரும் 2008ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
திருவல்லிக்கேணியில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்தா டி.ஆர். பாலு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேது சமுத்திரக் கால்வாயில் முதல் கப்பல் போக்குவரத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் துவக்கி வைப்பார்கள் என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், பாக் ஜலசந்தி பகுதியில் ஆதம்பாலத்தில் மட்டும் தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆதம் பாலத்தை ராமர் பாலம் என்கிறார்கள். இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
இது பற்றி மக்களின் கருத்து கேட்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென் னையில் கிரீன்வேஸ் சாலையில் இதற்கான அலுவலகத்தில் கருத்து கேட்கப்படுகிறது.
பொதுமக்கள் தங்களுடைய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்கலாம். கடிதம் மூலமும் எழுதி அனுப்பலாம். 31-ந் தேதி வரை பொது மக்களிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்படும். தமிழக மக்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மக்களும் இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
தற்போது நிறைய கடிதம் இந்த குழுவுக்கு வந்துள்ளது. அவர்கள் மக்களின் கருத்துக்களை அறிக்கையாக தயாரித்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உத்தரவினை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.