தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் நாளை அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் நடத்துவார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசின் பென்ஷன் திட்டம், தினக்கூலி தொழிலாளர்கள் பணி நிரந்தரம், பட்டியல் எழுத்தர்கள், நவீன அரிசி ஆலைத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், நேரடி நெல் கொள்முதல் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்களின் நிர்வாகத்தில் தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்து அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவ்வப்போது இடமாறுதல் செய்து பழி வாங்கி வருவதோடு, இந்த அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆகவே, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளர்களுக்கு பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தர கோரியும் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் நாளை (16ஆம் தேதி) சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.