நாமக்கல் அருகே சூறாவளி: ரூ.10 லட்சம் வாழை நாசம்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வீசிய சூறாவளி காற்றில் ரூ.பத்து லட்சம் மதிப்புள்ள 15 ஆயிரம் வாழைகள் சாய்ந்து நாசமாகியுள்ளது. நஷ்டஈடு வழங்கவேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் காவிரி நீர் பாசன பகுதிகளான மோகனூர், ப.வேலூர் காவிரி கரையோரங்களில் ஆயிரத்து 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பில் விவசாயிகள் வாழை பயிர் சாகுபடியை பிரதானமாக செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளின் முதன்மை பயிராக வாழை விளங்கி வருகிறது.
பெரும்பாலும் பூவன், கற்பூரவல்லி, ரஸ்தாளி ரக வாழையை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டுள்ளனர். பயிரிட்ட ஒரு ஆண்டில் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராகிவிடும். இங்கு சாகுபடி செய்யப்படும் வாழைத்தார் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
காற்று காலமான ஆடி மாதத்தில் வாழை மரத்தை பாதுகாக்க விவசாயிகள் மூங்கில் குச்சிகளை மரத்துடன் கட்டி வைப்பது வழக்கம். இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையால் பெரிய அளவிலான சேதத்தை தவிர்த்து வந்தனர். காற்றுக்கு சம்பந்தம் இல்லாத புரட்டாசியில் கடந்த இரண்டு தினங்களாக மோகனூர் பகுதியில் உள்ள வாழை மரங்களை சூறாவளி காற்று புரட்டிப்போட்டது.
ஒருவந்தூர், ஒருவந்தூர் புதூர், ஆவாரம்பாளையம், மந்தக்களம், சம்பாமேடு மற்றும் ஈஸ்வரன் கோயில் பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழைகள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன.
அறுவடை செய்ய உள்ள நிலையில், குலை தள்ளிய 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.பத்து லட்சம். வாழை பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழைகளை கணக்கிட்டு அதற்கேற்ப வாழை விவசாயிகளுக்கு அரசு நஷ்டஈடு வழங்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.