ஜெயலலிதா எத்தனை அறிக்கை விட்டாலும் சேது சமுத்திர திட்டம் நிச்சயமாக நிறைவேறும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
சேது சமுத்திர திட்டம் முடிந்து போன கதை என்றும், இனி தொடர்வதற்கே வாய்ப்பே இல்லாத விஷயம் என்றும் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார். சேது திட்டத்தை முடிந்து போன கதை என்று அறிக்கை விடுகிறார் என்றால், அவருக்கு தமிழ்நாட்டின் மீது எந்த அளவிற்கு அக்கறை உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாமே? என்று அமைச்சர் டி.அர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதியின் மற்ற திட்டங்கள் என்ன ஆனதோ அதுபோலத் தான் சேது திட்டமும் ஆகும் என்கிறார் ஜெயலலிதா. கலைஞரின் திட்டங்களுக்கெல்லாம் மூடுவிழா நடத்தியவர் ஜெயலலிதா தான். ஆனால், மீண்டும் கலைஞர் பொறுப்பேற்ற பிறகு இந்த திட்டங்கள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என்று பாலு தெரிவித்துள்ளார்.
அதைப் போலவே சேது திட்டமும் நிச்சயமாக நிறைவேறும். அது நடைபெறக் கூடாது என்று ஜெயலலிதா போன்றவர்கள் எத்தனை அறிக்கை விட்டாலும், சதி செய்தாலும் அதிலே வெற்றி கிடைக்காது. சேது சமுத்திரத் திட்டம் எந்த அளவிற்கு பணி நிறைவேறியுள்ளது என்று சொல்லத் தயாரா என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார். திட்ட வரைவில் குறிப்பிட்டுள்ளபடி மொத்தம் 89 கிலோ மீட்டர் நீளத்திற்கும் 12 மீட்டர் ஆழத்திற்கும் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதிலே இதுவரை 54 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 9 மீட்டர் ஆழத்திற்கு அகழ்வு பணிகள் நடைபெற்றுள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் ஒன்றரை லட்சம் டன் கொள்ளளவு கப்பல்கள் இந்த வழியாக செல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறார். வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் அவ்வப்போது புதுமைகள் புகுத்தப்படுவது இயல்பு. அதைப்போலவே கப்பல் துறையிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் கொள்ளளவுக்கு மிகுதியான கப்பல்கள் புழக்கத்தில் உள்ளன. அவை எத்தனை? எத்தனை துறைமுகங்களில் அவைகள் வந்து போகின்றன என்பது ஜெயலலிதாவிற்கு தெரியாது என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மொத்தமாக 9 ஆயிரத்து 147 கப்பல்கள் கடலில் பயணிக்கின்றன. அவற்றில் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் கொள்ளளவுக்கு மிகுதியாக கப்பல்களின் எண்ணிக்கை ஆயிரத்து 367 மட்டுமே. இவற்றில் இந்திய துறைமுகங்களுக்கு வந்து போகின்ற கப்பல்களின் (ஒரு லட்சம் டன் அளவுக்கு மேல்) எண்ணிக்கை 2.4 சதவீதம் மட்டுமே. மேலும், 1 லட்சத்து 50 ஆயிரம் டன் கொள்ளளவு கப்பல்கள் வந்து போகுமானால் அதற்குரிய நீர்வழித்தடம் 18 மீட்டர் ஆழம் அமைய வேண்டும். அப்படியென்றால் எந்த அளவு திட்ட செலவு அதிகரிக்கும் என்பதை ஜெயலலிதா எண்ணிப் பார்க்க வாய்ப்பில்லை. இதுபோன்ற திட்டங்களை தேவைக்கேற்ப படிப்படியாகத்தான் ஆழப்படுத்தி செயல்படுத்த முடியும் என மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
இந்தியாவிலே உள்ள மொத்த துறைமுகங்கள் (12 பெரிய துறைமுகங்கள், 187 சிறிய துறைமுகங்கள்) 199-ல் ஒன்றரை லட்சம் டன் கொள்ளளவு கப்பல்கள் செல்லக்கூடிய அளவிற்கு உள்ள துறைமுகங்கள் நான்கு தான் (சென்னை, விசாகப்பட்டினம், ஜாம் நகரில் உள்ள வாடினார், ஹல்தியா). சேது சமுத்திரத் திட்டத்தில் உள்ள நீர்வழித் தடத்தின் வழியாக உலகத்திலே 100 கப்பல்கள் இருக்குமேயானால் 80 கப்பல்கள் செல்ல வழியுள்ளது என்று ஜெயலலிதாவுக்கு அமைச்சர் டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார்.