தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. ஆட்டோக்களும் இயங்கவில்லை. மேலும் கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தது!
சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடைவிதிக்கவலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த முழு அடைப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போன்ற சூழல்தான் நிலவுகிறது.
அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்கள் இயங்கவில்லை. பேருந்துகள், லாரிகள், ஆட்டோக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. எனவே விசைப் படகுகளும், நாட்டுப் படகுகளும் கரைகளில் நிறுத்தப்பட்டு இருந்தன.
சென்னையில் மின்சாரஇரயில்கள் வழக்கம் போல இயங்கின. இருந்தாலும் அவற்றில் பயணிகள் குறைவாகவே இருந்தனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 68 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பேருந்துகள் இயக்குவதற்குத் தயார் நிலையில் இருந்தும், ஊழியர்கள் பணிக்கு வராத காரணத்தால் அவற்றை இயக்க முடியவில்லை என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அந்த மாவட்டக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாநில எல்லையோர மாவட்டங்களைத் தாண்டிச் செல்ல லாரிகள் அனுமதிக்கப்படவில்லை. எனவே வெளி மாநிலச் சரக்குப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.