விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தையொட்டி 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி 5000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். எனது தலைமையில் அனைத்து இணை ஆணையர்களும், துணை ஆணையர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறோம் என்று காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
காவல்துறை தலைவர் மேலும் 7 துணை ஆணையர்களை பாதுகாப்பு பணிக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும் 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினரும், கமாண்டோ படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்று ஆணையர் நாஞ்சில் குமரன் கூறினார்.
மெரீனா கடற்கரைக்கு வரும் காதல் ஜோடிகளை காவல்துறையினர் விரட்டியடிக்க மாட்டார்கள். தாராளமாக காதல் ஜோடிகள் வந்து அமர்ந்து பேசலாம். ஆபாசமாவும், அருவெருக்கத் தக்க வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அப்படி நடந்து கொண்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.