ராமர்பால விவகாரத்தில் பாஜக அரசியல் ஆதாயம்தேட முயற்சிக்கிறது என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாசு காரத் கூறியுள்ளார்.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சித்தலைவரும் சுதந்திரப்போராட்ட வீரருமான பி.இராமமூர்த்தியின் முழு அளவு வெண்கலச்சிலையைத் திறந்துவைத்தபிறகு பொதுக்கூட்டத்தில் பிரகாசு காரத் பேசியதாவது:
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சிபிஎம் அனுமதிக்காது. மக்களிடம் உறுதியளித்துள்ளபடி குறைந்தபட்சப் பொது செயல்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதை நிறைவேற்றுவதா அல்லது அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்குள் நுழைவதா என்பதை காங்கிரசுதான் முடிவுசெய்ய வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சிபிஎம்மின் நிலைப்பாடு குறித்து மக்களிடம் விளக்கி அவர்களின் ஆதரவைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இதற்காக நாடுதழுவிய இயக்கத்திற்கு திட்டமிட்டுள்ளோம்.
அமெரிக்காவுடன் தந்திரமான கூட்டுறவுக்குள் நுழையாதிருக்கும் வரையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எங்கள் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடதுசாரிகள் குழுவின் மூன்றாவது கூட்டம் அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தாத வரை எத்தனைமுறை வேண்டுமானாலும் அதுபற்றி விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
அணுசக்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அது சுயசார்புடையதாக இருக்க வேண்டும். வெளிநாட்டை நாம் நம்பியிருக்கக் கூடாது. நமக்கான தொழில்நுட்பத்தை நாம் சொந்தமாக உருவாக்காதவரை அணு இயந்திரங்களையோ எரிபொருளையோ நாம் இறக்குமதி செய்யக்கூடாது.
நம்நாட்டிற்கான மொத்த எரிசக்தித் தேவையில் 3 விழுக்காட்டைத்தான் அணுசக்தி நிறைவு செய்யும். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நாம் செயல்படுத்தினால் 2020ஆம் ஆண்டில் 20ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்யமுடியும். இது மொத்தத் தேவையில் ஏழு விழுக்காடு மட்டுமே.
ராமர்பால விவகாரத்தில் பாஜக அரசியல் ஆதாயம்தேட முயற்சிக்கிறது. அவர்களுக்கு இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தைப் பற்றிக் கவலையில்லை.