ராமர்பால விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சர்ச்சைக்குரிய மனுவின் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அனைத்திந்திய தீவிரவாத எதிர்ப்புக் கூட்டணியின் தலைவர் எம்.எஸ்.பிட்டா கோரியுள்ளார்.
இது குறித்து இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் நீக்கப்பட்ட பகுதிகள் குறித்துப் பொதுமக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களைத் தீர்க்கும் பொருட்டு, அம்மனுவின் வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறினார்.
மத்திய அரசின் கவனக்குறைவால் தவறு நடந்திருக்காவிட்டாலும் கூட இந்த விசயம் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தேர்தல் பலன்களை கண்டிப்பாக பாதிக்கும் என்று பிட்டா கூறியுள்ளார். இவர் இளைஞர் காங்கிரசின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமர்பாலம் மற்றும் ராமன் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கூறிய கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்த பிட்டா, இந்தக் கருத்துக்கள் கடவுள் ராமனின் வரலாற்றுத் தன்மைபற்றிக் கேள்வி எழுப்புவதுடன் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கிறது என்றார்.
மேலும் ராமர்பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.