நிம்மதியாக வாழ விடுங்கள்: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கண்ணீர்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
என்னையும், மகள்களையும் நிம்மதியாக வாழவிடுங்கள் என்று சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கண்ணீர் மல்க கூறினார்.
வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இறந்துபோன என் கணவர் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை தொடராக ஒளிபரப்ப ஒரு தொலைக்காட்சி திட்டமிட்டுள்ளது. அதை எதிர்த்து நான், சென்னை எட்டாவது சிட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றேன். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையை பிரதிபலிக்கும், "குற்றப்பத்திரிகை' திரைப்படத்தைச் சுட்டிக்காட்டி, வீரப்பன் தொடருக்கான தடை உத்தரவை ரத்து செய்துவிட்டனர். இது வழக்கில் உயர் நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்ய உள்ளேன் என்றார்.
ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கி, 15 ஆண்டுக்கு பிறகே, "குற்றப்பத்திரிகை' படம் வெளியிடப்பட்டது. என் கணவர் வீரப்பன் உள்பட உறவினர்கள் மீது தமிழக மற்றும் கர்நாடகாவில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.இத்தகைய சூழலில், வீரப்பன் சீரியல் ஒளிபரப்பினால் வழக்கின் தன்மையும், வழக்கில் தொடர்புடையவரும் பாதிக்கப்படுவர். எனது மகள்கள் வாழ்க்கையும் கேள்விகுறியாகிவிடும் என்று முத்துலட்சுமி தெரிவித்தார்
எங்களுக்கு எதிரான முடிவையே வீரப்பன் தொலைக்காட்சி தொடர் ஏற்படுத்தும். ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி, அதிலிருந்து விடுபடாமல் தவிக்கிறோம். இந்நிலையில், மேலும் ஒரு பாதிப்பை எதிர்கொள்ள முடியாது. எங்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்துவிட்டு தொடரை ஒளிபரப்பு செய்துகொள்ளட்டும்.அதையும் மீறி, வீரப்பன் தொடர் ஒளிபரப்பினால் நீதிகேட்டு சேலம் கலெக்டர் அலுவலகம் அல்லது சென்னை தலைமை செயலகம் முன்பாக குடும்பத்தோடு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன். நானும் என் மகள்களும் மனம் நொந்து உள்ளோம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கண்ணீர் மல்க கூறினார்.