யாழ்பாணம் தமிழர்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு, மருந்து பொருட்களை அவர்களுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு அனுமதி அளிக்க கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து உதவிப் பொருள்கள் கொண்டு செல்ல முயன்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த பிரச்சனையில் நியாயம் கிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன், சாகும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று பழ.நெடுமாறன் அறிவித்தார். விடுதலை செய்யப்பட்ட அவர் நேற்று சென்னை வந்தார்.
இந்த நிலையில், இன்று காலையில் கோயம்பேடு சிக்னல் அருகில் பழ.நெடுமாறன் திடீரென உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இதற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அருகில் உள்ள கட்டிடத்தினுள் பழ.நெடுமாறனும் அவரது ஆதரவாளர்களும் நாற்காலி போட்டு அமர்ந்தனர்.
அப்போது காவல்துறையினர் உள்ளே புகுந்து இங்கு உண்ணாவிரதம் இருக்க கூடாது என்று கூறினர். இதனை சன் டி.வி கேமிரா மேன் படம் பிடித்தார். இதை கண்டித்த காவல்துறையினர் அவரை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் பெரிதாகாமல் இருக்க அந்த காவல்துறை அதிகாரி மன்னிப்பு கேட்டார்.
பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன், நடிகர் மன்சூர் அலிகான் உள்பட ஏராளமானோர் சென்றனர். அங்கு செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.