முதல் முறையாக இந்த ஆண்டு முதல் பள்ளி மாணவிகளுக்கு சீருடையாக சுடிதார் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்று கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.
பொங்கல் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி-சேலை தயாரிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா இதில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி 16 விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 71.40 லட்சம் சேலைகளும், 73.85 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 30 லட்சத்து 42 ஆயிரம் சேலைகளும், 30 லட்சத்து 69 ஆயிரம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆண்டு 164 லட்சம் பாலிகாட் சேலைகளும், 164 லட்சம் பாலிகாட் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.256 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர முதியோர்களுக்கு 20 லட்சம் சேலைகளும், 4 லட்சம் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பொங்களுக்கு முன் இவைகள் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
முதல் முறையாக இந்த ஆண்டு முதல் மாணவிகளுக்கு சீருடையாக சுடிதார் வழங்கப்படுகிறது. 4 லட்சம் மாணவிகளுக்கு சுடிதார் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர சமூகநலத்துறை மூலம் 14 லட்சம் சீருடைகளும் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா தெரிவித்தார்.