இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) படிக்க ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டம் பயின்ற ஆதிதிராவிட மாணவர்கள் சட்டத் தொழில் தொடங்க, அதாவது கட்டிட வாடகை செலுத்தி, புத்தகங்கள் மற்றும் மரச்சாமான்கள் வாங்க ரூ.5 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டத்தினை 1996ஆம் ஆண்டில் முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார். அத்திட்டம் கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
5வது முறையாக பதவி ஏற்ற முதல்வர் கருணாநிதியால் மீண்டும் சட்டம் பயின்ற பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்கிட மானியம் ரூ.5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டு, முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு முதல் இந்திய ஆட்சிப்பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) ஆகிய தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவ-மாணவியர் அத்தேர்வில் வெற்றி பெற ஏதுவாக அவர்கள் புத்தகங்கள் வாங்கிடவும் மற்றும் இதர செலவினங்களுக்காகவும் ரூ.25 ஆயிரம் வீதம் 100 மாணவர்களுக்கு வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
இப்புதிய திட்டத்தின் மூலம் ஏழை ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் உயர் பதவிகளைப் பெற்றிட அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.