சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 6 மாநகராட்சிகளும் 'விளம்பரப் பலகைகள் அற்ற' மாநகராட்சிகளாக மாற்றப்படும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்!
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டதென தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை நீக்குவது என்றும், விளம்பரப் பலகைகளை நீக்குவதற்கு தடை பெற்று தொடர்ந்து விளம்பரப் பலகைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அரசு வழக்கு தொடரும் என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக விளம்பரப் பலகைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், நிகழ்ச்சி முடிந்த 2 நாட்களுக்குப் பிறகு விளம்பரப் பலகைகளை உரியவர்கள் நீக்கிவிட வேண்டும் என்றும, அவ்வாறு செய்யத் தவறினால் அரசே அவைகளை நீக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
டெல்லி, பெங்களூருவைத் தொடர்ந்து விளம்பரப் பலகைகள் அற்ற மாநகராட்சி பட்டியலில் தமிழ்நாட்டின் 6 மாநகராட்சிகளும் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.