அரசின் சார்பில் அனுமதி பெற்று மணல் எடுப்பதையே மணல் கொள்ளை நடப்பதாக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்!
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொழிற்சாலைகளும், மக்கள் தொகைப் பெருக்கத்தால் வீடுகள் கட்டுவதும் அதிகரித்துள்ளதால் மணல் தேவை மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது. அந்த மணலை மக்களுக்கு முறையாக விநியோகம் செய்ய அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மணல் எடுப்பது என்ற பெயரால் சிலர் தவறு செய்வதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
சிலர், மணல் கொள்ளை நடைபெறுவதாகக் கூறிக்கொண்டு அதைத் தடுக்க மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பதும், முறையாக அரசின் சார்பில் அனுமதி பெற்று மணல் எடுப்பதையே மணல் கொள்ளை நடப்பதாக விமர்சிப்பதும் உண்மையிலேயே மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு செய்யப்படும் திட்டமிட்ட காரியமாகவே தெரிகிறது.
அரசு விதிமுறைகளுக்கு மாறாக மணல் குவாரிகளில் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. அப்படி எது நேர்ந்தாலும் அரசாங்கம் அதனை அனுமதிக்காது. அதே நேரத்தில் முறையாக விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மணல் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்படும் முயற்சிகளையும் அரசாங்கம் அனுமதிக்க இயலாது.
ஆறுகள் வற்றி மணலே இல்லாத ஒரு நிலைமை வந்துவிடும் எனறெல்லாம் மக்களை பீதியடையச் செய்து, போராட்டம் என்ற பெயரால் குழப்பத்தை உண்டாக்க முனைவோரின் வலையில் மக்கள் விழவேண்டாம். மணல் விற்பனையில் தவறு நடக்க இந்த அரசு அனுமதிக்காது. அதேநேரத்தில் அரசு அனுமதியுடன் மணல் எடுப்பதைத் தடுத்திடுவோர் யாராயினும் அவர்களை சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று தனது அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.