கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் பலத்த மழையின் காரணமாக அம்மாவட்ட விவாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!
ஈரோடு மாவட்டம் விவசாயத்தை முக்கியமாக கொண்ட பகுதியாகும். இம்மாவட்டத்தில் இந்த வருடம் பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தங்கள் விளைநிலத்தில் பயிரிட்ட பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் தவித்து வந்தனர். மழை இல்லாமல் வெய்யில் அதிகமாக அடித்த காரணத்தால் விவசாய கிணற்றில் இருக்கும் சொற்ப தண்ணீரும் வற்றிவிட்டது. இதனால் வானம் பார்த்த பூமியாய் ஈரோடு மாவட்டம் மாறியது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்துவரும் மழை காரணமாக பவானி சாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் மூலம் பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஈரோடு மாவட்டம் ஈரோடு, காங்கேயம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, தாளவாடி உள்ளிட்ட பகுதியில் மழை அதிகமாக பெய்தது. இதன் காரணமாக விவசாய வயல்களில் தண்ணீர் தேங்கியும் கிணற்றின் நீர்மட்டம் உயர்ந்தும் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.