Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேலம் ரயில் கோட்டம் பிப்ரவரியில் செயல்படத் துவங்கும்: வேலு

சேலம் ரயில் கோட்டம் பிப்ரவரியில் செயல்படத் துவங்கும்: வேலு

Webdunia

, வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (14:49 IST)
பாலக்காடு கோட்டத்திற்கு உட்பட்ட தமிழ்நாட்டின் ரயில் பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட உள்ள சேலம் ரயில் கோட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் செயல்படத் துவங்கும் என்று ரயில்வே அமைச்சர் ஆர். வேலு கூறினார்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி ஒன்றை எழுப்பிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, சேலம் ரயில் கோட்டம் எப்பொழுது முதல் துவங்கும் என்பதை தேதியுடன் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு இடதுசாரி உறுப்பினர்களும், சமாஜ்வாடி உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது.

உறுப்பினர்களை அமைதிபடுத்த அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காததை அடுத்து 5 நிமிடத்திற்கு அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன.

மீண்டும் அவை கூடியபோது பேசிய ரயில்வே துணை அமைச்சர், 2005-06 ஆண்டு ரயில்வே நிதிநிலை அறிக்கையில் சேலம் ரயில் கோட்டம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது 2006-07ஆம் நிதி நிலை அறிக்கையில் அதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டது என்றும் கூறினார்.

சேலம் கோட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட அந்த நிதியில் 1.5 கோடி செலவு செய்யப்பட்டுவிட்டது என்றும், சேலம் ரயில்வே கோட்டம் இயங்குவதற்காக கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதாகக் கூறிய வேலு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சேலம் கோட்டம் இயங்கும் என்று கூறினார்.

ஆனால் அதற்கான துவக்க விழா எப்பொழுது நடைபெறும் என்று இன்னமும் முடிவாகவில்லை என்று கூறினார்.

சேலம் ரயில் கோட்டத் துவக்க விழா செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலக்காடு ரயில் கோட்டத்தில் இருந்து கோவை - ஈரோடு - சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பகுதிகளில் உள்ள 623 கி.மீ. தூர ரயில் பாதையும், திருச்சிராப்பள்ளி ரயில் கோட்டத்திற்குட்பட்ட 135 கி.மீ. தூர ரயில் பாதையையும், புதிதாக அமைக்கப்பட உள்ள 85 கி.மீ. தூர ரயில் பாதைகளைக் கொண்டு சேலம் ரயில் கோட்டம் இயங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil