அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஈடுபட்டு வரும் அதிநவீன வெப்ப அணு சோதனை உலை திட்டத்தின் கீழ் குஜராத்தில் நவீன அணு உலை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த பிரதமர் அலுவலக அமைச்சர் பிருதிவிராஜ் செளகான், ரூ.2,500 கோடி முதலீட்டில் 10 ஆண்டு காலத்தில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள வெப்ப அணு சோதனை உலை உருவாக்கும் திட்டத்தில் இந்தியா இணைந்துள்ளது என்றும், அத்திட்டத்தின் கீழ் ஒளி அணுச் சேர்க்கை மூலம் அணு மின் சக்தி தயாரிக்கும் வெப்ப அணு உலை உருவாக்கத்திற்கான ஆய்வகம் ஒன்றை குஜராத் மாநிலம் காந்தி நகரில் அமைப்பதற்கான உயர் அதிகாரக் குழு ஒன்றிற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று கூறினார்.
குஜராத்திலும், ராஜஸ்தானிலும் 2 அணு உலைகளை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, ஆம் என்று பதிலளித்த அமைச்சர், ராஜஸ்தானின் ரவாத்பட்டாவிலும், குஜராத்தின் காக்ரபாரிலும் 700 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய இரண்டு அணு உலைகளை அமைப்பதற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதலை அரசு வழங்கியுள்ளது என்று கூறினார்.
இது மட்டுமின்றி 11வது ஐந்தாண்டு திட்டத்தில் மகாராஷ்டிர மாநிலம் ஜெய்காபூரிலும் ஒரு அணு மின் சக்தி நிலையம் அமைக்க கொள்கை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஜனார்தனன் பூஜாரி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜவான், கேரளத்தின் சாவாரா, காயங்குளம், ஆராட்டுபுழா-திருக்குன்னக்குழா-தொட்டப்பள்ளி ஆகிய இடங்களில் டைட்டானியத்தின் மூலக் கனிமமான இல்மனைட், யுகோக்சின், ரூடைல் ஆகியன சற்றேறக்குறைய 115 மெட்ரிக் டன் அளவிற்கு உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.