மஞ்சள் விவசாயிகளுக்கு உடனடி பணம் வழங்கும் திட்டத்தை ஈரோட்டில் அம்மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் தொடங்கி வைத்தார். விவசாயிகளுக்கு பணம் அல்லது "டிடி'யாக மட்டுமே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் விளையும் மஞ்சள்கள் பெரும்பாலும் ஈரோட்டிற்குதான் விற்பனைக்கு வருகிறது. ஈரோடு நகரில் நடக்கும் மஞ்சள் விற்பனையில் 20 சதவீதம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் நடக்கிறது. விவசாயிகள் இக்கூடத்தில் இருப்பு வைக்கும் மஞ்சளுக்கு இலவச காப்பீடு செய்யப்படுகிறது. ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 850 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அலுவலகத்துடன் கூடிய கிடங்கு உள்ளது.
இக்கூடம் மூலம் 2006-07ம் ஆண்டு ரூ.26 கோடியே 62 லட்சம் மதிப்புள்ள 11,721 மெட்ரிக் டன் மஞ்சள் விற்பனை செய்யப்பட்டு, ரூ.26 லட்சத்து 62 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பு 2007-08ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 4,248 மெட்ரிக் டன் மஞ்சள் ரூ.86 கோடியே 82 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மஞ்சள் விற்பனையில் விவசாயிகளுக்கு செக் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதில், விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் இருந்து வந்தன. இதை தவிர்க்க மஞ்சள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழி செய்துள்ளது.
மஞ்சள் விவசாயிகளுக்கு "உடனடி பணம் வழங்கும்' திட்டம் துவக்க விழா, ஈரோடு மஞ்சள் விற்பனைக் குழு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்தது.
மஞ்சள் விற்ற வியாபாரிகளிடம் பணத்தை ஆட்சியர் உதயச்சந்திரன் உடனடியாக வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், மஞ்சள் விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு பத்து நாள் முதல் 15 நாள் வரை காலதாமதமாக பணம் கிடைத்து வந்தது. சட்டத்துக்கு முரணாக தாமதமாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்த முரணான நடவடிக்கையை மாற்ற மஞ்சள் வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது, உடனடியாக விவசாயிகளுக்கு பணம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் விற்பனை செய்யும் மஞ்சளுக்கு பணம் அல்லது "டிடி' மட்டுமே வழங்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்கும். வணிகர்களின் தினசரி விற்பனை பாதிக்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படும். மஞ்சள் விவசாயிகளுக்கு இது மிகவும் முக்கியமான நாளாக கருதுகிறேன்.இதனால், விவசாயிகள் தாங்கள் பெற்ற கடன் தொகையை உடனடியாக திருப்பிக் கொடுக்க முடியும். பணம் வாங்குவதற்காக வந்து செல்லும் செலவு குறையும். ஒருங்கிணைந்த மஞ்சள் கூடம், மஞ்சள் வளாகம், எலக்ட்ரானிக் தராசு, சுகாதார முறையில் புதிய கட்டிடம் போன்றவை அமைய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.