தென்காசியில் நேற்று முன்தினம் இந்து முன்னணி தலைவர் குமார்பாண்டியன் கொலையால் ஏற்பட்ட மோதலில் 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த மோதலில் குமார் பாண்டியனின் சகோதரர்கள் சேகர், செந்தில், சுரேஷ் ஆகிய 3 பேரும், எதிர்தரப்பை சேர்ந்த பசீர், அசன்மைதீன், நாகூர்மீரான் ஆகிய 3 பேரும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இதனால் தென்காசி பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த கொலையில் சம்பந்தப்பட்ட சக்திபாண்டியன், கபிலன், சுப்பிரமணி சுரேந்தர், தங்ககடை சக்தி, கேபிள் முத்து, சேகர், மாரியப்பன், சண்முகம், பூக்கடை ரமேஷ், ஆட்டோ ரமேஷ், சுரேஷ், கிருஷ்ணமணி, செண்பகம் எதிர் தரப்பை சேர்ந்த அனிபா, அப்துல்லா, பசீர், அலாவுதீன், அசன்கனி, அïப், ராஜாமுகமது, செய்யதுஅலி, மீரான்மைதீன், நவாஷ், நாகூர்மீரான், சம்சுதீன், பசுனுதீன் மற்றொரு மீரான்மைதீன் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
முதல்கட்டமாக குமார் பாண்டியனின் அண்ணன் சக்தி பாண்டியன், அவரது உறவினர் மணி என்ற பிஸ்தா மணி ஆகியோரையும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த அலாவுதீன், அனிபா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சக்திபாண்டியன் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார்.
சக்திபாண்டியனுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தென்காசி இந்து முன்னணி பிரமுகர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார்கள். ஆனால் காவல்துறையினர் சக்தி பாண்டியனை விடுவிக்க மறுத்துவிடடடனர்.
கைதான 4 பேரையும் தென்காசி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு முன்பு நேற்று இரவு ஆஜர்படுத்தினார்கள்.
அவர்களை வருகிற 30-ந்தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சக்தி பாண்டியன், பிஸ்தா மணி, அனிபா, அலாவுதீன் ஆகிய 4 பேரை பாளை. மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர்.
அனிபாவுக்கு தலையில் காயம் இருப்பதாக சிறை அதிகாரிகள் கூறினார்கள். இதைத் தொடர்ந்து அவரை பாளை. ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் பிரிவில் அனுமதித்தனர்.
பாளை. மத்திய சிறையில் போதிய இடவசதி இல்லாத தால் அலாவுதீனை ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைத்தனர். சக்தி பாண்டியனையும், பிஸ்தா மணியையும் நாங்குநேரி சிறையில் அடைத்தனர்.
நாங்குநேரி கிளை சிறையிலும் இன்று காலை சக்திபாண்டியன் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பதாக கூறினார். ஆனால் அதிகாரிகள் அவரை சமரசப்படுத்தி சாப்பிட வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொலையில் தொடர்புடைய மேலும் சிலர் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தென்காசி பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பியது: தென்காசியில் இன்று கடைகள் திறக்கப்பட்டன.