தமிழக அரசின் திட்டங்களை வன்முறையைத் தூண்டிவிடும் பேச்சுக்களின் மூலம் மிரட்டும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!
அமைதி, நட்புறவு, தோழமை ஆகிய உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுப்பதாலேயே நாட்டைக் காடாக்கும நாகரீகமற்ற முறைகளுக்கு கைலாகு கொடுப்பவர்கள் என்ற குற்றத்திற்கு நாமும் ஆளாகி விடுவதா? என்று இன்று விடுத்துள்ள அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.
"16 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியம் எடுத்துள்ள நிலத்தை இப்போது திருப்பிக் கொடுக்கச் சொல்லும் ஒரு போராட்டத்தை அறிவித்து, அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தை விட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்து, அதற்காக இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டவர்களே மீண்டும் அந்த இடத்தை தங்களிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கோரிக்கை, அதற்காக ஆதரவாக போராட்டம் என்று கூறி, "சாவியைப் பிடுங்குங்கள் - பூட்டை உடையுங்கள்" என்று ஒரு தலைவர் பகிரங்கமாகச் சொல்லி அது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது என்றால், என் செய்வது - தமிழகத்தின் அமைதி கருதி தலை குனிந்து கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது.
சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் பேசலாம், எத்தகைய அராஜகப் போராட்டத்தையும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்துவிட்ட சூழ்நிலையில், வன்முறையற்ற, அமைதி, நட்புறவு, தோழமை ஆகிய உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுப்பதாலேயே நாட்டைக் காடாக்கும் நாகரீகமற்ற முறைகளுக்கு கைலாகு கொடுப்பவர்கள் என்ற குற்றத்திற்கு நாமும் ஆளாகி விடுவதா?
இதனை யோசித்து முடிவெடுக்கும் காலம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.