Publish Date: Sat, 11 Aug 2007 (18:07 IST)
Updated Date: Sat, 11 Aug 2007 (18:06 IST)
தமிழ்நாடு முழுவதும் கம்பிவட தொலைக்காட்சி இணைப்பை வழங்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்கென தனி நிறுவனத்தை தொடங்குவது என்று முடிவெடுத்துள்ளது!
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் இன்று கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தீர்மானம் குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு சார்பில் கேபிள் டி.வி. இணைப்புகள் வழங்குவதற்கென தனியே ஒரு நிறுவனத்தை அமைத்து, அந்த நிறுவனத்தின் மூலம் கேபிள் தொலைக்காட்சியை கட்டண அலைவரிகளைப் பார்க்கும் ஏற்பாட்டு முறை நடைமுறையில் உள்ள சென்னை பெருநகர்ப் பகுதியில் பன்முக ஏற்பாட்டு முறை இயக்குநராகவும், தமிழகத்தின் பிற பகுதிகளில் கம்பிவட தொலைக்காட்சி அளிப்பவராகவும் செயல்படுவதென்றும், இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வதென்றும் முடிவு செய்யப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.