பவானிசாகர் அணை இந்தாண்டு இரண்டாவது முறையாக நேற்று நிரம்பியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 ஆகும். கடந்த ஜூன் மாதம் நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டது.
அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நேற்று மாலை பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 200 கனஅடி வந்தது.
இதன் காரணமாக அணையில் இருந்து மேல்மதகுகள் மூலமாக பவானி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 101.98 ஆக இருந்தது.
அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க அதிகரிக்க பவானி ஆற்றில் தண்ணீர் விடுவது மேலும் கூடுதலாக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பவானி ஆற்றில் வெள்ளஅபாச எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.