கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.
சென்னை உள்பட 6 மாநகராட்சிகளில் கடந்த ஜூன் 1 ஆம் தேதியும், பிற மாநகராட்சிகளில் ஜூலை 1ம் தேதியிலிருந்து கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, இருசக்கர வாகன ஓட்டுனர்களிடம் காவல் துறையினர் அதிக கெடுபிடி செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து 'அதிக கெடுபிடி வேண்டாம்' என காவல் துறைக்கு முதலமைச்சர் கருணாநிதி அறிவுரை கூறினார்.
இந்நிலையில், டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டாய் ஹெல்மெட் சட்டத்தை அரசு தீவிரமாக அமல்படுத்தவில்லை என்றும், இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாதது ஏன் என்பது குறித்து இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.