கோவை தொடர் குண்டு வெடிபு வழக்கில் சிறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 7 பேருக்கு பிணைய விடுதலை வழங்கி கோவை தனி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 166 பேரில் கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மதானி உள்ளிட்ட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் அவர்களுக்கு பிணைய விடுதலை வழங்கி கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்ராவதி உத்தரவிட்டார்.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட 158 பேரில் மதானி உள்பட 69 பேர் மீதான கூட்டு சதி உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும், 89 பேர் மீது சிறு குற்றங்களே நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இவர்கள் 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்திருப்பதால், இவர்களுக்கான தண்டனைக் காலம் இதைவிட குறைவு என்பதால் பிணைய விடுதலை கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என நீதிபதி உத்ராபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து பிணைய விடுதலை கோரி 105 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது நேற்று நடைபெற்ற விசாரணையில் அப்துல் ரகுமான், சதீஷ்சன் ஆகிய இரண்டு பேருக்கு பிணைய விடுதலை கோவை தனி நீதிமன்றம் வழங்கியது. இதனைத்தொடர்ந்து இன்று, காதர், அப்துல் சலீம் உள்ளிட்ட 7 பேருக்கு பிணைய விடுதலை வழங்கி நீதிபதி உத்ராவதி உத்தரவிட்டார்.