சென்னையை சேர்ந்த ரவுடி வெள்ளை ரவி, அவனது கூட்டாளி காவல் துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது, காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சென்னையை சேர்ந்தவன் ரவுடி வெள்ளை ரவி. இவன் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளை ரவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ராஜ்குமார் என்பவரை கடத்திச் சென்று, அவரை விடுவிக்க ரூ 2 கோடி கேட்டு மிரட்டி வந்தான்.
இதையடுத்து, வெள்ளை ரவியை பிடிக்க காவல் துறையினர் முயன்ற போது அவன் தலைமறைவாகி விட்டான். வெள்ளை ரவியை சுட்டுப் பிடிக்க சென்னை மாநகர காவல் துறை ஆணையர் லத்திகாசரண் உத்தரவிட்டார். இந்நிலையில், வெள்ளை ரவி, அவனது கூட்டாளிகள் ஓசூர் எல்லையில் பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை மாநகர கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையில், உதவி ஆணையர் ஜெயக்குமார் உள்ளிட்ட காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது வெள்ளை ரவி, அவனது கூட்டாளிகளை சரணடையுமாறு காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால், வெள்ளை ரவியும், அவனது கூட்டாளிகளும் காவல் துறையினர் மீது பொட்ரோல் குண்டுகளை வீசினர்.
மேலும், காவல் துறையினரை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் உதவி ஆணையர் ஜெயக்குமார் படுகாயம் அடைந்தார். நிலைமை மோசமானதை தொடர்ந்து வெள்ளை ரவி, அவனது கூட்டாளி குணா ஆகியோர் மீது காவல் துறையினர் 14 ரவுண்டுகள் சுட்டனர். இதில் வெள்ளை ரவி நெற்றியில் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.
வெள்ளை ரவியின் கூட்டாளி குணா குண்டடிபட்டு படுகாயம் அடைந்தான். அவனது மற்ற கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். காயம் அடைந்த குணா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
தப்பிச் சென்ற வெள்ளை ரவியின் கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.