தூத்துக்குடி மாவட்டத்தில் டைட்டானியம் தொழிற்சாலை அமைப்பது தொடர்பான விவகாரம் குறித்து தான் வெளியிட்ட அறிக்கையின் மீது ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தால் அது தொடர்பான கோப்புகள் நீதிமன்றத்தில் பேசும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்!
ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதிலளித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது அறிக்கையில் அதிமுக அரசு காலத்திய கோப்புகளில் காணப்பட்ட பல விஷயங்களை தான் அம்பலப்படுத்தியிருந்ததாகவும், அந்தக் கோபத்தில்தான் தன் மீது சிவில், கிரிமினல் வழக்குகளைப் போடுவதாக ஜெயலலிதா எச்சரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
சட்டப் பேரவையில் அவரது ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் பேசியவற்றை அடிப்படையாக வைத்துத்தான் அந்த அறிக்கையை நான் வெளியிட்டுள்ளேன். அதற்காக என் மீது ஜெயலலிதா வழக்கு போட்டால் அதை எதிர்கொள்ள அவர்கள் ஆட்சிக் காலத்திலே உள்ள அழிக்க முடியாத சான்றுகளே ஏராளமாக இருக்கின்றன.
"தொழில்துறை அமைச்சர் நயனார் நாகேந்திரன் இவ்வாறு பேசியுள்ளார் : ஏற்கனவே ஜெயலலிதாவால் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னாலேயே டைட்டானியம் டை ஆக்சைடு என்ற மிகப் பெரிய தொழிற்சாலையை அங்கே நிறுவுவதற்கு ஒப்பந்தம் ஏற்பட்டு இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நானும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற உணர்வில் அதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என்று கூறியது மட்டுமின்றி, 31.03.2005 அன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "டைட்டானியம் ஆக்சைடு தொழிற்சாலை 3,000 கோடி ரூபாய் செலவில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வரவிருக்கிறது. ரூ.3,000 கோடி முதலீடு என்பது மிகப்பெரிய ஒரு முதலீடு. இந்த காலகட்டத்தில் இந்த ஆண்டு ரூ.750 கோடியை அங்கே முதலீடு செய்திருக்கிறார்கள்" என்று அந்த அறிக்கையில் நயனார் நாகேந்திரன் பேசியதை கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
"ஜெயலலிதா வழக்கு போடட்டும், சட்டப் பேரவையில் பேசப்பட்ட பேச்சுகளும், அரசு கோப்புகளும் நீதிமன்றத்தில் உண்மையைத் தெளிவாக்கும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.